1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (11:33 IST)

மஞ்சனத்தி புராணமான பண்டாரத்தி புராணம்! - பாட்டை மாற்றிய கர்ணன் படக்குழு!

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கர்ணன் படத்தில் உள்ள பாடல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் பாடலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன.

அந்த வகையில் இரண்டாவதாக வெளியான பண்டாரத்தி புராணம் பாடல் மீது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக பண்டாரத்தி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ் “பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன ... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள்.” என தெரிவித்துள்ளார்.

இதனால் பாடல் வரிகளில் பண்டாரத்தி என்பதற்கு பதிலாக மஞ்சனத்தி என்ற வார்த்தை இடம்பெறும் என்றும் விரைவில் இந்த பாடல் யூட்யூபில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.