வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (10:07 IST)

‘அவரின் நியாயமான கோபம் பிடிக்கும்… குட்பை கேப்டன்’- விஜயகாந்த் குறித்து கமல் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதையடுத்து இப்போது வரை ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயகாந்துக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் அஞ்சலி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் பலர் விஜயகாந்துடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் “விஜயகாந்தை நான் முதலில் எப்படி சந்தித்தேனோ அப்படிதான் அவர் பிரபல நடிகரான பின்னரும் பழகினார். பல விமர்சனங்கள் அவமானங்களை தாண்டி மேலே வந்தவர் அவர். மற்றவர்களுக்காக போராடும் குரல் அவருடையது. பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன்.

அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் நியாயமான கோபம்தான். அது பல நேரத்தில் நடிகர் சங்கத்துக்கு உதவியுள்ளது. அவர் நடித்த முதல் படமாக ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்பட விழாவுக்கு சென்றிருக்க வேண்டிய படம். ஆனால் அதிலிருந்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டது அவரின் திறமைதான். தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் அவருக்கு உண்டு. அவர் போல இருக்க முயற்சி செய்யவேண்டும். குட்பை கேப்டன்” என நெகிழ்ந்துள்ளார்.