1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:31 IST)

ராஜினாமா செய்து தேர்தலில் நிற்கும் பாக்யராஜ்! –அதிரடி முடிவு

சர்கார் படப் பிரச்சனையில் புகார் கொடுத்த வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்ட திரை எழுத்தாளர்கள் சங்க தலைவர் தற்போது திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் கதைத் தன்னுடையது என ராஜேந்திரன் என்பவர் திரை எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். அதை ஏற்று விசாரித்த சங்க உறுப்பினர்கள் இரண்டு கதையையும் படித்துப் பார்த்துவிட்டு கதைகளின் சாராம்சம் ஒன்றே என பெரும்பாண்மையினரின் சார்பாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து முருகதாஸை அழைத்து சமாதானத்திற்கு முயன்றது சங்கம். ஆனால் முருகதாஸ் பிடி கொடுக்காததால் வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.

அதனால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் கே பாக்யராஜ் இரண்டு கதைகளின் சாராம்சத்தை சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதையடுத்து பாக்யராஜ் கதையை வெளியில் சொல்லிவிட்டார் என அவர் மீது விமர்சனங்கள் வந்தன.

கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு எப்படியும் வருணுக்கு சாதகமாகவே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமாதானத்துக்கு இறங்கி வந்தார் முருகதாஸ். கதை ராஜேந்திரனுடையதுதான் என ஒத்துக்கொண்டு அவர் கேட்ட சன்மானத்தையும் வழங்கினார். படத்தொடக்கத்தில் அவரின் பெயரும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சர்ச்சைகள் அடங்கி படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கே பாக்யராஜ் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது இந்த ராஜினாமாவுக்குக் காரணமாக சில உறுப்பினர்கள் மூலமாக சர்கார் படக்குழு அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் பரவி வருகிறது.

தற்போது பாக்யராஜ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது ராஜினாமா குறித்து பேசி வருகிறார். ‘அதில் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் தான் நேரடியாக தலைவரானதால், சில அசௌகரியங்களை நான் எதிர்கொள்ள நேரிட்டது. அதனால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுக்கிறேன். என்னோடு சேர்ந்து என் முடிவை ஆதரிப்பவர்கள் ராஜினாமா செய்யலாம். தேர்தலில் வெற்றிபெற்று தலைவராக பதவியேற்க முடிவு செய்துள்ளேன். இப்போது சங்கம் இருக்கும் நிலைமையில் தேர்தல் நடத்துவது வீண்செலவு என நினைக்கலாம். ஆனால் சங்கமே வீணாகிப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பணம் செலவாவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. தேர்தல் நடந்து வெற்றி பெற்று தலைவரானால் மீண்டும் பணியை சிறப்பாகத் தொடர்வேன்’ என அறிவித்தார்.

ராஜினாமா செய்ய ஏதேனும் நிர்பந்தம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இரண்டு நாட்கள் கழித்து அதுகுறித்து அறிவிக்கிறேன் என கூறினார்.