''ஜெய்பீம்'' பட விவகாரம்... நடிகர் சூர்யாவுக்கு திரைப்பிரபலங்கள் ஆதரவு
ஜெய்பீம் திரைப்படக் குழுவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் திரைப்பிரபலங்களின் ஆதரவு பெருகி வருகிறது.
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ். இதற்கு நடிகர் சூர்யாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டார். பின்னர் இந்தப் பட விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது.
இந்த விவகார்த்தில் ஜெய்பீம் படக் குழுவினருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தற்போது வெற்றிமாறன், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் கேள்வி கேட்கும் ஆயுதம் சமூக நீதிதான் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் இயக்குநர் அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில், சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தும் சினிமாவையும், அதைக் கஷ்டப்பட்டு உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ; ஒரு நல்ல சமூகத்தில் கடமை. ஜெய்பீம் குழுவினருடன் எப்போதும் நான் எனத் தெரிவித்துள்ளார்.