1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (14:59 IST)

பேட்ட, விஸ்வாசம் ஓடும் திரையங்குகளில் ரெய்டு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘சர்கார் சினிமாவுக்கு வசூலித்தது போல ரஜினி நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய சினிமாக்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்’’ என்று குற்றச்சாட்டு வைத்தார்.அப்போது, இந்த படங்கள் மதுரையில் எத்தனை தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, 20–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படங்கள் ஓடுகின்றன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ‘‘மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ள 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது.இந்த குழுவில் வருவாய்த்துறை, நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகள், வக்கீல் கமி‌ஷனர்கள் தலா ஒரு தியேட்டருக்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.இந்தக் குழு மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 17–ந் தேதி வரை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பின்னர் அந்த குழு தனது அறிக்கையை 18–ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.