செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (17:28 IST)

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு !!

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்காக தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தரவேண்டுமென இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வந்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்துக்கு இதில் இணக்கம் இல்லை எனத் தெரிகிறது.

இளையராஜா தரப்பில் இருந்து அவரது உதவியாளர கஃபார் என்பவரிடம் இருந்து ’இளையராஜா இசையமைக்கும் பகுதியான ஸ்டூடியோ-1இல் சில மேசைகளைப் போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இசையமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டூடியோவை அத்துமீறிப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாகக் கணினிகள் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் இசைக்கருவிகள் சேதமாக வாய்ப்புள்ளது’ என விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அப்போது, தமிழரசன் படத்திற்கு இளையராஜா தனது வீட்டில் முதன்முதலாக இசையமைத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தன்னுடைய இட உரிமை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து இளையராஜா தனது மனுவில் கூறியுள்ளதாவது, பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தன்னை வெளியேற்றக்கூடாது என சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு உயர்நீதிமன்றம், இவ்வழக்கை 2 வாரத்தில் முடிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும், இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான பிரச்சனையை 2 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான சமரச சமய பேச்சு தோல்வி அடைந்ததால் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்காக தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தரவேண்டுமென இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.