திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:48 IST)

இளையராஜாவின் முதல் சிம்பொனி வெளியீட்டு தேதி அறிவிப்பு.. தீபாவளி போனஸ் கொடுத்த இசைஞானி!

தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் அடிக்கடி இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. சமீபமாக இளையராஜா ராயல்டி தொடர்பாக வழக்குத் தொடர்ந்ததும், பாடலில் பாடல் வரிகளை விட இசைக்குதான் முக்கியத்துவம் எனப் பேசிவருவருவதும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதனால் சோசியல் மீடியாக்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான வாக்குவாதங்கள் தொடர்ந்து வந்தது. அதேசமயம் AI டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இளையராஜா பல்வேறு பாடல்களுக்கு நடனமாடுவது போல சிலர் வெளியிட்டு வந்த வீடியோக்களும் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு மெர்க்குரி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சிம்பொனியை அவர் பதிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 26 ஆம் தேதி அடுத்த ஆண்டு அந்த சிம்பொனி வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  இது அவரின் ரசிகர்களுக்கு தீபாவளி போனஸாக அமைந்துள்ளது.