''வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன்''.- திருமாவளவன் டுவீட்
விடுதலை படம் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் ''விடுதலை படம் வெற்றிமாறன் படைப்பு என முத்திரை பதித்துள்ளார்'' என்று பாராட்டியுள்ளார்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் இன்று (மார்ச் 31ஆம் தேதி )உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், விடுதலை திரைப்படம் பார்த்தை விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது.
அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.
மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.