இருமுகன் இப்போ இருபத்தைந்து முகன் – கமலை முந்தும் விக்ரம்

Vikram
Last Modified வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:07 IST)
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விக்ரம். அப்படி அடுத்து இவர் நடிக்க இருக்கும் படத்தில் மிகப்பெரிய ஒரு சாதனையை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் தற்போது “கடாரம் கொண்டான்” திரைப்படம் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த “துருவ நட்சத்திரம்” விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார் விக்ரம்.

இந்த திரைப்படத்தில் விக்ரம் 25 வகையான கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் இதுவரை யாரும் ஒரே படத்தில் 25 கதாப்பாத்திரங்களில் நடித்தது கிடையாது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகில் ஒரே படத்தில் அதிக கதாப்பாத்திரங்களில் நடித்த புதிய சாதனையை விக்ரம் செய்வார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரே படத்தில் அதிக கதாப்பாத்திரங்களில் நடித்த பெருமை சிவாஜிகணேசன் அவர்களையே சேரும். நவராத்திரி படத்தில் ஒன்பது கதாப்பாத்திரங்களாக நடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை செய்தார். அதற்கு பிறகு தசாவதாரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் 10 அவதாரங்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :