பரீட்சையில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக அர்த்தம் இல்லை: ஜிவி பிரகாஷ்
நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவ மாணவிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: வெற்றியோ தோல்வியோ அதை சரி சமமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்வி இல்லாத வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வருவதற்கு தோல்வி மிகவும் அவசியம். இந்த ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக அர்த்தம் இல்லை. வாழ்க்கை மிகவும் பெரியது. தற்கொலை என்பது எதற்குமே தீர்வு அல்ல. நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே பல குழந்தைகள் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மூன்று உயிர்கள் மரணம் அடைந்ததைவிட கொடுமையான காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது. 'I am very tired' என லெட்டர் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதற்கு இந்த சமூகமே காரணம்
முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். தோல்வி அடைந்தால் தட்டிக் கொடுங்கள். நீங்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு தேர்வு உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது. எனவே குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். தேர்வில் தோல்வியடைந்தால் பரவாயில்லை. ஆனால் உயிர் போய்விட்டால் திரும்ப வராது. எதையும் எதிர் நோக்க கற்றுக்கொள்ளுங்கள். வெற்றியோ தோல்வியோ எதையும் சமமாகப் பார்க்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்’
இவ்வாறு ஜிவி பிரகாஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்