குருவாயூரப்பன் மஹிமை! உண்மை கதையை படமாக எடுத்த தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’.
இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது ,
“இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம் தான் உள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் உள்ளது என்றார்கள்.நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன். அப்படி ஒரு நம்பிக்கை. பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சொன்னால் யாரும் நம்பவில்லை . ஆனால் என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா? அதற்காகவே படமாக எடுத்து குருவாயூரப்பனின் மஹிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இப்படத்தை எடுத்து இருக்கிறேன்.” என்றார்.
விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது ,
” இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்த ‘கிரிஷ்ணம்’ படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டது மே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான்.கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக ‘கிரிஷ்ணம்’ படமும் இருக்கும் என நம்புகிறேன் என்றார்.