ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (13:42 IST)

வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைப்பதா? – சூர்யாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

நடிகர் சூர்யா “சூரரை போற்று” திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது திரையரங்க உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள சூரரை போற்று திரைப்படம் கொரோனா பாதிப்புகள் காலமாக நீண்ட மாதங்களாக வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடுவதாக சூர்யா இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சோதனை மிகுந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரின் நன்மைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சூர்யா விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடியில் வெளியான போதே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

சூரரை போற்று ஓடிடியில் வெளியாவதன் மூலம் இந்தியாவிலேயே பெரிய ஹீரோ ஒருவரின் அதிக பட்ஜெட் படம் ஒன்று ஓடிடியில் வெளியாவது இதுவே முதன்முறை. இது மேலும் பலரை ஓடிடி நோக்கி ஈர்க்க கூடும். இதனால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூர்யா போன்ற ஹீரோக்களை வளர்த்து விட்ட திரையரங்க பண்பாட்டை சூர்யாவே எட்டி உதைக்கிறார் என திரையரங்க உரிமையாளர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.