‘மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில்…’ -வணங்கான் படத்தை விமர்சித்த லெனின் பாரதி!
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.
அதன் பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தர். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் கடந்த 10 ஆம் தேதி ரிலீஸானது.
படம் கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. படத்தில் மாற்றுத் திறனாளிகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றி பேசியுள்ள இயக்குனர், பாலியல் குற்றவாளிகளைக் கதாநாயகன் கொல்வது போலவும் அதனை நீதிமன்றமே சரியென்று ஏற்றுக் கொள்வது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி வணங்கான் படம் பற்றி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் “பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்..” என விமர்சித்துள்ளார்.