1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)

தனுஷின் அடையாளங்கள் மறைக்கப்பட்டது குறித்து மேலூர் தம்பதி பேட்டி!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்று வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

 
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன் நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம்  உள்ளதாக கூறி அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் கதிரேசன் தாக்கல் செய்தார். இதனிடையே தனுஷ் தரப்பிலும் பள்ளிச்சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.
 
தொடர்ந்து நடந்த வழக்கில் நீதிபதிகள் கேட்டு கொண்டதற்கிணங்க, டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், சிறிய  அளவிலான மச்சம் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளை முழுமையாக ஆய்வு செய்து விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் மேலூர் தம்பதி நாங்கள் பணம் காசுக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. நடிகர் தனுஷ் எங்கள்  மகன்தான். 16 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்ற எங்கள் மகன் கலைச்செல்வன், சினிமாவில் தனுஷ் என்ற பெயரில்  நடித்து புகழ் பெற்று இருக்கலாம். ஆனாலும் அவன் எனது தாய்-தந்தை இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் சொன்னாலே  போதும்.
 
தனுஷ் எங்கள் மகன் என்று நிரூபிக்க மரபணு சோதனைக்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கதிரேசன்,  மீனாட்சி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.