அந்த அளவுக்கு பெருந்தன்மை இல்லை- சிம்பு பத்தி தனுஷ் ஓபன் டாக்
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ், தயாரிப்பில் வெற்றிமாறனின் கனவுத் திரைப்படமான வட சென்னை நீண்ட எதிர்ப்பார்ப்பிற்குப் பின் ஆயுதபூஜை வெளியீடாக வெளிவர இருக்கிறது.
இந்தப் படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வரும் தனுஷ் உலகச் சாம்பியன் ஆக நினைக்கும் நேசனல் லெவல் கேரம் ப்ளேயராக நடித்துள்ளார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தில் மிகப்பெரிய அரசியலும் இருக்கிறது.வட சென்னை மக்களின் நிலம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வடசென்னைப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களோடு உரையாடினர்.
அப்போது நடிகர் தனுஷ் வடசென்னை படம் உருவான விதம் குறித்து பேசினார். அதில் ‘பொல்லாதவன் படத்திற்கு முன்பே இந்தக் கதை எனக்குத் தெரியும். பொல்லாதவன் முடித்த பிறகு நானும் வெற்றிமாறனும் இந்தப் படத்தைத் தொடங்க நினைத்தோம். ஆனால் அப்போதைய பொருளாதார சூழ்நிலைகளால் இந்தப் படத்தைத் தொடங்க முடியாமல் போனது. அதனால் ஆடுகளம் ஆரம்பித்தோம். அதன் பிறகு ஒருநாள் வெற்றிமாறன் ஒரு எனக்கு போன் பண்ணி வடசென்னையை சிம்புவை வைத்து எடுக்கப்போவதாகக் கூறினார். நான் அவரிடம் வாழ்த்துக்கள் கூறினேன். பின்பு ஒருநாள் எனக்கு போன் பன்னி இந்த படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்தை நடித்துத் தர முடியுமா எனக் கேட்டார். சார் வடசென்னையை சிம்புவுக்கு விட்டுத்தரும் அளவுக்கு எனக்கு மனதிருக்கிறது ஆனால் அதே படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெரிய மனதில்லை எனக்கூறினேன். ஆனால் எப்படியோ கடைசியில் நானே நடித்து இப்போது வெளிவர இருக்கிறது’ எனக் கூறினார்.