தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதே தேதியில் ‘சூர்யா 44’ ரிலீஸா?
தனுஷ் நடித்து, இயக்கி வரும் ’இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், சற்று முன்னர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தொடங்கிய ’இட்லி கடை’படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில், நாயகியாக நித்யா மேனன் நடித்து கொண்டிருக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு, தனுஷ் மற்றும் நித்யா மேனன் மீண்டும் ஜோடியாக இணைவதால், இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதில் கூடுதலாக, அருண் விஜய் முக்கியமான பாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பாக வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, சென்னை, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் ’இட்லி கடை’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரித்து வருகிறார்.
இந்த சூழலில் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில், ’இட்லி கடை’ படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூர்யா 44’ திரைப்படமும் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால், தனுஷ் மற்றும் சூர்யாவின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva