புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:51 IST)

சசிக்கலாவை சீண்டிய தர்பார் டயலாக் – வேலையை காட்டிய முருகதாஸ்!

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள தர்பார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவை குறிப்பிடும் வசனம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இன்று உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது ரமணா முதல் தற்போதைய தர்பார் வரை பெரிய ஸ்டார் ஹீரோக்களை வைத்து சமூக நீதி, அரசியல் பேசுவதில் ஜித்தர்.

விஜய் நடிப்பில் இவர் இயக்கிய கத்தி, சர்க்கார் படங்களில் கூட அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான சர்க்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடும்படி வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிக்கலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில் தர்பார் படத்தில் சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்பவெல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வறாங்க சார்” என்று கூறுவதாக வசனம் உள்ளது. இது சமீபத்தில் சசிகலா விவகாரத்தை கருத்தில் வைத்தே படத்தில் வைக்கப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் பேசி கொள்கிறார்களாம்.