இளம் நடிகர்களுடன் போட்டி! ரஜினி டைரக்டர் செலக்ஷன் சீக்ரெட் இதுதானா?
நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் “தலைவர் 171” உறுதியாகியுள்ள நிலையில் ரஜினியின் இயக்குனர் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொடங்கி இன்று வரை சினிமாவின் அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் போன்ற பெரிய முதிர்ச்சியடைந்த இயக்குனர்களுடனே படம் செய்து வந்த ரஜினி கபாலிக்கு பின் தொடர்ந்து இளம் இயக்குனர்களோடு பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் “தலைவர் 171” அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த இளம் இயக்குனர்கள் இளம் நடிகர்களை வைத்து ஹிட் கொடுக்கும்போது ரஜினியின் பார்வைக்குள் வருகின்றனர் என்ற கூற்றும் உள்ளது.
சமீபத்தில் ரஜினி நடித்த படங்கள் வரிசையில் பார்க்கும்போது முருகதாஸின் சர்கார் வெற்றிக்கு பிறகு அவருடன் தர்பார், சிவாவின் விசுவாசம் வெற்றிக்கு பின் அவருடன் அண்ணாத்த, நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்திற்கு பின் அவருடன் ஜெயிலர், ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஞானவேலுடன் “தலைவர் 170”, லோகேஷின் மாஸ்டர், லியோ படங்களுக்கு பிறகு அவருடன் “தலைவர் 171”.
இளம் நடிகர்கள், இளம் இயக்குனர்களின் காம்போவிற்கு நிகராக தன்னையும் அப்டேட் செய்து கொண்டு இளம் இயக்குனர்களோடு பொருந்தி படங்களை ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஆனால் ரஜினிகாந்தை இயக்கும் முன் அந்த இயக்குனர்கள் விஜய், அஜித் படங்களை இயக்குவது தற்செயல் ஒற்றுமையா அல்லது அதுதான் இயக்குனர்களை தேர்வு செய்ய காரணமா என்ற விவாதங்களும் இருந்து வருகிறது.
Edit by Prasanth.K