திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:34 IST)

பிரபலங்கள் பாராட்டும் பரியேறும் பெருமாள்

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் எழுத்தாளர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்தை சினிமா பிரபலங்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

தென்தமிழகப் பகுதிகளில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கதிர், ஆனந்தி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்ப்பில் உருவாகி இருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரை பிரமுகர்கள் பலரும் படம் குறித்து தங்கள் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

யோகிபாபு: இதுவரை நான் பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் நடித்தது போன்ற கதாபாத்திரம் எனக்கு அமையவில்லை. ஆண்டவன் கட்டளைக்குப் பிறகு என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இது போன்ற குணச்சித்திர பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்; காதல், சாய்ராட்(மராத்தி), போல இந்த படம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும். மிகவும் நேர்மையானப் படமாக வந்துள்ளது. இந்த மாதிரியான படங்கள் வியாபார ரீதியாக் வெற்றிப் பெற்று பல கோடிகளை வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவின் தரம் உயரும்.

இயக்குனர் நவீன்: தவிர்க்க முடியாத இயக்குனராக வந்துள்ளார் மாரி செல்வராஜ். அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் படைப்புகள் பல வடிவங்களில் உருவாகி தற்போது சினிமாவில் வர ஆரம்பித்திருக்கின்றன.

நடிகர் ஜான் விஜய்: எல்லோர் மனதையும் கண்ணையும் திறக்கக் கூடிய அருமையான் சித்திரம். சிவப்பு மட்டுமல்ல நீலமும் என்றும் புரட்சிதான்.

இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி: சில படங்கள் மட்டும்தான் படம் பார்த்து முடிந்த பின்னும் நம்மை பாதிக்கும். அந்த மாதிரியான படமாக ப.பெ. வந்துள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த, என்னை பாதித்த படங்களில் ஒன்றாக ப.பெ. வந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்தது பெருமையாக உள்ளது. அதையும் மீறி ஒரு ரசிகனாக இந்த படத்தை மிகவும் ரசித்தேன்.

இயக்குனர் மீரா கதிரவன்; விஞ்ஞான வளர்ச்சி நுழைந்துவிட்ட கிராமங்களில் கூட சாதி விஷமாகப் பரவியுள்ளது. மாரி செல்வராஜ் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் படத்தைக் கொடுத்துள்ளார். படத்தைத் தயாரித்த ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன்: இதுவரை தென்மாவட்டங்களை மையப்படுத்தி வந்துள்ள படங்கள் அனைத்தும் அங்குள்ள சாதிய ஒடுக்குமுறைகளை மறைமுகமாக ஊக்குவிப்பவையாகவும் அல்லது அவற்றை உயர்வாகப் பேசியோதான் வந்திருக்கின்றன. முதன்முதலாக ப,பெ, சாதிய வன்முறையின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. உண்மையான அரசியல் சினிமாவைத் தந்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இயக்குனர் லெனின்பாரதி: சாதியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு மிகபெரிய பாதை அமைத்துள்ளது ப,பெ. ரஞ்சித்துக்கும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் எனது வாழ்த்துகள்.