தியேட்டர்களில் சிசிடிவியா ? - தமிழ்ராக்கர்ஸுக்கு முடிவுகட்டிய விஷால்!
தீபாவளிக்குள் அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டும் என்று தமிழ்த்திரைப்பட தாயரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திருட்டு வீடியோ பைரசியைத் தடுப்பதற்காகக் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளிலும் நவம்பர் 6 தீபாவளிக்கு சிசிடிவி பொருத்த வேண்டும்.
பொருத்தப்பட்ட கேமராக்கள், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி ரெக்கார்ட் செய்யப்படும்.
வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு, திரைப்படம் தரப்பட மாட்டாது.
இனி அனைத்துக் காட்சிகளிலும், 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேரக் கண்காணிப்புப் பணிக்கு அமர்த்தப்படுவர்.
ஒவ்வொரு முறை படம் ஆரம்பிக்கும் முன்னர், திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.
படம் பார்க்கவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாகப் பரிசோதனை செய்யப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். இந்த நடவடிக்கையால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை அந்தக் குழுவில் வைத்து ஆலோசித்து, அதற்கு தீர்வு காணவேண்டும் . திருட்டு வீடியோவை ஒழிக்க இந்தக் குழு கடுமையாகப் போராடும் என விஷால் தெரிவித்துள்ளார்.
இப்படி 7 விதமான தீர்மானங்கள் அந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தீபாவளிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.