பைரஸி ஒழிப்பு; படப்பிடிப்புக்கு அனுமதி– மத்திய பட்ஜெட்டில் சினிமாவுக்கு சலுகைகள்
இன்று காலை நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயலால் தாக்கல் செய்தார். அதில் இந்திய சினிமாத் துறையினருக்குப் பல சலுகைகளை வழங்கினார்.
2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் இந்த பட்ஜெட் தாக்கல் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துதல், விவசாயிகளுக்கு ஆண்டு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் பணியாளர்களுக்கான கிராஜுட்டி 30 லட்சமாக உயர்த்துதல் போன்றவை அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ளன.
இதுபோல சினிமா துறைக்கும் இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் ‘சினிமா துறையானது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்குத் துறையாகும். இந்தத் துறையை ஊக்கமளிக்கும் வகையில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும். மேலும் திருட்டு விசிடி மற்றும் பைரசிகளை ஒழிக்க புதிய ஒளிப்பதிவு சட்டவிதிகளும் இயற்றப்படும்’ என அறிவித்துள்ளார்.
இதுநாள் வரை படப்பிடிப்புகள் நடத்த தயாரிப்பாளர்கள் பல்வேறு அரசுத்துறைகளிடம் அனுமதியினைப் போராடி பெற்று அல்லல்பட்டு வந்தனர். இப்போது இணையதள சாளரத்தின் மூலம் நேரடியாக எந்த இடத்திற்கும் பெற முடியும் என்பதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.