ரசிகர்களை சித்ரவதை செய்யவா ஒருவர் படம் எடுப்பார்?... கங்குவா குறித்து போஸ் வெங்கட் கருத்து!
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் ட்ரோல் செய்யபப்ட்ட படமாக ஆனது. இத்தனைக்கும் இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பு பெரியளவில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
அதனால் எதிர்பார்ப்போடு வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்து கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தையும் படக்குழுவினரையும் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து மீம்களை பறக்கவிட்டனர். இதனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அஞ்சான் படத்துக்குப் பிறகு ஒரு மோசமான படமாக கங்குவா அமைந்தது.
இந்நிலையில் கங்குவா படத்தில் நடித்திருந்த நடிகர் போஸ் வெங்கட் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் கங்குவா படம் குறித்து பேசியுள்ளார். அதில் “சினிமா எடுப்பவர்கள் அதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். மூன்று மணிநேரம் மக்களை சித்ரவதை செய்யவா ஒருவர் படம் எடுப்பார்? அப்படியெல்லாம் யாரும் நினைக்க மாட்டார்கள்.
ஒரு இயக்குனர் தன்னுடைய அதிகபட்ச கற்பனையை திரையில் சொல்ல முயற்சிக்கிறார். அது சில நேரங்களில் தவறாக போகலாம். யாராலும் ஒரு படம் கண்டிப்பாக ஓடும் என்று கணிக்க முடியாது. படத்தைப் பற்றி விமர்சிக்கலாம். ஆனால் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் திட்டும் அதிகாரத்தை யார் கொடுத்தது?” எனக் கூறியுள்ளார்.