ஓடிடி தளங்களுக்கு சென்ஸார் வேண்டும் – முதல்வர் கோரிக்கை!
திரையரங்குக்கு மாற்றாக உருவாகி வரும் ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை முறையைக் கொண்டுவர வேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியிடப்படும் சினிமாக்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் தணிக்கை முறை உள்ளது. ஆனால் ஓடிடி எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் எந்தவொரு சென்ஸார் முறையும் இல்லை. இதன் மூலம் பாலியல் மற்றும் அதிக வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகம் இடம்பெறும் வகையில் திரைப்படங்கள் உருவாவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் மற்றொரு தரப்பினரோ ஓடிடி வயது வந்தவர்களுக்கானது; அதனால் தணிக்கை தேவையில்லை என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் உள்ளிட்ட வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம். இதில் இடம்பெற்றுள்ள அநாகரிகமான வசனங்களும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் பார்ப்பவர்கள் மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.’ எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.