செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:32 IST)

கசடதபற படக்குழுவினருக்கு பாரதிராஜா வாழ்த்து!

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா கசடதபற படக்குழுவுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் ஆறு குறும்படங்களின் தொகுப்பாய் உருவாகியுள்ளது கசடதபற. ஆறு குறும்படங்களையும் சிம்பு தேவனே எழுதி இயக்கியுள்ள நிலையில் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஆறு குறும்படங்களுக்கும் சாம் சி எஸ், ப்ரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், ஜிப்ரான் ஆகியோர் தனித்தனியாக இசையமைத்துள்ளனர். இந்த ஆறு குறும்படங்களிலும் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர், ப்ரேம்ஜி, ரெஜினா கஸாண்ட்ரா, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘"திரைப்படங்களை தியேட்டரில் ரசிகர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்வதில் தற்பொழுது வணிகம் சார்ந்து பெரும் நெருக்கடியும், சவால்களும் நிறைந்துள்ளன. ஆனால், படைப்பாளி என்பவன் ஏதோ ஒரு ஊடகத்தின் வாயிலாகத் தன் படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று, கலைக்காக அவன் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான்.

உண்மையான கலைஞனுக்குப் பொருளாதாரம் இரண்டாம் பட்சம்தான். கரோனா காலத்தில் நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் சிறந்த கலைநுட்ப எழுத்தாளன் இயக்குநர் சிம்புதேவன் எழுதி இயக்கியுள்ள 'கசட தபற' தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பார்த்தேன்.

மிகச் சிறந்த திரைப்படம். ஆறு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் மிக நேர்த்தியான திரைக்கதையையும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு கதைக் களம்.

ஆனால், ஒரே நேர்க்கோட்டில் மிகச்சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கிய சிம்புதேவனுக்கும், கரோனா காலத்தில் அனைவருக்கும் வேலை கொடுப்பதற்காகத் தயாரிப்பாளராக மாறிய எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ரவிச்சந்திரனுக்கும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்". எனத் தெரிவித்துள்ளார்.