இன்று வெளியாகியுள்ள பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல், இந்திய சினிமா உலகில் புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் 2 தியேட்டர்களை தவிர, மற்ற அனைத்து தியேட்டர்களிலும் இந்த படம்தான் இன்று திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.50 கோடியும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.30 கோடியும், வட இந்திய மாநிலங்களில் ரூ.30 கோடியும் இந்த படம் இன்று வசூல் செய்யும் எனத் தெரிகிறது. அப்படி பார்த்தால் மொத்தம் ரூ.110 கோடி வருகிறது. மேலும், வெளிநாட்டில் ரூ.30 கோடி வசூலிக்கும் எனத் தெரிகிறது. எனவே ரூ.140 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், இந்திய சினிமா உலகில் பாகுபலி 2-வின் வசூல் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.