செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (09:57 IST)

அந்தாதூன் ரீமேக்… ப்ரோமோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்றிய படக்குழு!

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் படத்தின் ரீமேக் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருந்தார். ஆனால் லூசிபர் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்ததால் அதில் இருந்து விலகினார்.  இதையடுத்து பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார்.

இதையடுத்து இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இருவரும் அந்த படத்தில் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். இந்நிலையில் அந்தாதூன் ரீமேக்கிற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மூல வடிவத்துக்கு அமித் திரிவேதி அமைத்த பின்னணி இசையும் பாடல்களும் பாராட்டுகளைப் பெற்றன. இந்நிலையில் தமிழில் சிறப்பாக இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிரசாந்த் கருப்புக் கண்ணாடி அணிந்து பியானோ வாசிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பு புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.