வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:46 IST)

மலையாளப் பட இயக்குனருக்கு போன் செய்து கதை இருக்கா எனக் கேட்ட அஜித்… ஆனால் அதற்குள் நடந்த சோகம்!

இயக்குனர் சாச்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கிய அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால் அதன் பிறகு அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தின் இயக்குனர் சாச்சி சமீபத்தில் மறைந்தது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிக்க நடிகர் அஜித் ஆசைப்பட்டதாகவும் அவரே போன் செய்து சாச்சியிடம் கதை கேட்டதாகவும் சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக சமீபத்தில் அவர் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள் நேர்காணல் ஒன்றில் “அய்யப்பனும் கோஷியும் படத்தைப் பார்த்த அஜித் போன் செய்து பாராட்டினார். தனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என என் கணவர் சாச்சியிடம் கேட்டார். தான் இப்போதுதான் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், விரைவில் சந்திக்கிறேன் என்றும் சாச்சி கூறினார். ஆனால் அந்த சந்திப்பு நடக்காமலே போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.