புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:26 IST)

குனியும் போதும் நிமிரும் போதும் ஆடை சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டியுள்ளது – ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகை!

மலையாளப் படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகை அன்னா பெண் தனக்கு நடந்த மோசமான அனுபவம் பற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கும்பளாங்கி நைட்ஸ், ஹன்னா மற்றும் கப்பேலா ஆகிய படங்களில் நடித்து மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்துள்ளார் நடிகை அன்னா பென். இந்நிலையில் அவர் ஷாப்பிங் மார்க்கெட்டில் தனக்கு நடந்த மோசமான ஒரு சம்பவம் பற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘நானும் என் சகோதரியும் ஷாப்பிங் மார்க்கெட்டில் இருந்த போது என்னைக் கடந்து சென்ற இரு இளைஞர்களில் ஒருவரின் கை என் பின்பகுதியில் பட்டது. ஆனால் அவர் வேண்டுமென்றே அப்படி செய்தாரா என எனக்குத் தெரியவில்லை. இதை தூரத்தில் இருந்த என் சகோதரி தெளிவாக பார்த்துள்ளார். அவர் என்னிடம் வந்து ஆறுதல் படுத்தும் விதமாக பேசினார்.

நான் அந்த இருவரையும் நோக்கி சென்ற போது அவர்கள் என்னை முற்றிலுமாக தவிர்த்தனர். அப்போது நான் கோபமாக உணர்ந்தேன். ஏனென்றால் என்னால் அவர்களை ஒன்றும் சொல்ல முடியவில்லை. நாங்கள் எங்கள் குடும்பத்தினர் இருக்கும் காய்கறி பிரிவுக்கு சென்ற போதும் அவர்கள் எங்களைப் பின் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் நான் நடித்த படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவதாக பேச்சுக் கொடுத்தனர். ஆனால் நாங்கள் அவர்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. பின்னர் என் தாய் வருவதைப் பார்த்து அவர்கள் சென்றுவிட்டனர்.

அந்த நபர்கள் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி அங்கிருந்து சென்றதும், ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியாமல் இருந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. இது முதல்முறை இல்லை. ஆனாலும் கடினமானதாக உள்ளது. பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தாலே எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. குனியும் போதும் நிமிரும்போதும் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இதுபோன்ற ஆண்கள்தான்’ எனக் கூறியுள்ளார்.