நடிகர் விஷாலிடம் ரூ.45 லட்சம் மோசடி.... பெண் மீது வழக்குப் பதிவு
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பில்ம் பேக்டரியில் 45 லட்சத்தை அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணிபுரிந்த பெண் ஒருவர் கையாடல் செய்ததாக விஷாலின் மேலாளர் அரிகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அப்பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் விஷால் பில்ம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்த ஆம்பள, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.
இந்நிலையில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாயை களவாடியுள்ளதாக விஷாலின் மேனேஜர் அரி வடபழனி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து அவர் வீடு ஒன்று வாங்கியுள்ளதாகவும் மேலும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தற்போது விருகம்பாக்க காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், விஷாலின் அலுவலகத்தில் 15 வருடங்களாக வேலை பார்த்து வந்த பெண் கணக்காளர் ரம்யா வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை போலி ஆவணங்கள் மூலம் ரூ.45 லட்சம் பண மோசடி செய்து அதை அவரது உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வங்கிக் கணக்கில் போட்டு மோசடி செய்துள்ளதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் பெண்கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது. உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.