தயாரிப்பாளர் துரைக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்த பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் வி ஏ துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவ இவர், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகிய படங்களை தயாரித்தார். இந்த படங்களில் பிதாமகன் தவிர மற்ற படங்கள் எவையும் வெற்றிகரமான படமாக அமையவில்லை. இதனால் தனது சொத்துகளை இழந்த துரை, ஒரு கட்டத்தில் நலிந்த தயாரிப்பாளராக காணாமல் போனார்.
இந்நிலையில் இப்போது அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் தான் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருந்து வாங்க காசு கூட இல்லை என்று உதவி கேட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவ, நடிகர் சூர்யா சிகிச்சை செலவுக்காக 2 லட்ச ரூபாய் தருவதாக சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இப்போது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவருக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல ரஜினிகாந்தும் போனில் அழைத்து துரையிடம் ஆறுதல் சொல்லி நம்பிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.