வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:51 IST)

நடிகர் அஜித் குமாரின் ’வலிமை’ ... சினிமாவில் சாதனை தடம் பதித்தது எப்படி ?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் தனது ஓவ்வொரு படத்திலும் பல வித்தியாசமான கெட்டப்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.அவரது நடிப்பில் வெளியான வீரம் , விவேகம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூலில் சாதனை புரிந்துள்ளன.
இந்நிலையில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய ஹெச். வினோத், தற்போது , இரண்டாவதாக அஜித்துடன் கூட்டணி சேர்ந்து வலிமை என்ற படத்தை இயக்கிவருகிறார்.  அஜித்தின் வலிமைக்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.
 
தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில், தமிழ்த் தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக  1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார் அஜித் குமார்.  உயர் நிலைக் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போதே பள்ளிப்படிப்பை நிறுத்தினார்.அதன்பின், பைக் மெக்கானிக்கான பணியாற்றி அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது பைக் ரேஸில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருந்தார்.
 
அவரது பதினேழு  வயது காலகட்டத்திலேயே அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரே ஒருமுறை கூறியுள்ளார். 
 
அதன்பிறகு, சிறிய சிறிய விளம்பரப் படங்களில் தலைகாட்டினார் அஜித், தெலுங்கு சினிமாப் படங்களில் சின்ன ரோலில் நடித்து வந்தார். அந்த சமயம், ஒரு புதிய திரைப்படத்துக்கான புதிய முகம் தேவை என்று கேள்விப்பட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளரை அணுகி, தான் இதற்கு முன் நடித்த விளம்பரப் படத்தினை போட்டுக் காண்பித்தார். அதில் திருப்தி ஆன தயாரிப்பாளர் அஜித்தை வைத்து அமராவதி படம் எடுக்க ஆயத்தமானார். அமராவதி என்ற படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய நடிகரை கொடுத்தது.
 
ஆனால்,பராசக்தி ஹீரோ சிவாஜிபோல் ஒரே படத்தில் அஜித்தை யாரும் ஹீரோவாக ஏற்றிக்கொள்ளவில்லை.
 
அதன் பின் அஜித், விஜய்யுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே தோல்விப் படமாக அமைந்தது.
 
அதற்கடுத்து, இயக்குநர் வசந்த் இயக்கத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி தமிழகத்தின்  ஆசை நாயகன் ஆனார் அஜித்,. அதில், பிரகாஷ்ராக் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். 
 
அந்தப்படத்தின் சூட்டிங் வேளையின் போதுகூட பிரகாஷ்ராஜிடம், அஜித், என்னை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா என தயக்கத்துடன் கேட்டுள்ளதாக பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
என்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா என கேள்வி கேட்டவர்த்தான் இன்று அவரது ரசிகர்கள் அன்பின் விசுவாசத்துடன் ’தல’ என்று அழைத்து பாசத்துடன் தலையில் தூக்கி வைத்து, கொண்டாடுகின்றனர். இன்று தமிழ் சினிமாவில் அவரது முகத்தைப் பார்க்கவே லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
 
அவரது கால் சீட்டுக்கான ஹிந்தி தயாரிப்பாளர் ஃபோனி கபூர் முதற்கொண்டு பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர்.
அவர் திரையில் ’கண்ணான கண்ணே’ என பாடும்போது அவரது ரசிகர்களும் கண்ணில் நீர்கோர்த்து உருகி பாடுகின்றனர். 
 
சினிமாப் பின்புலம் இல்லாமல் சினிமாவில் நுழைந்து நடிகராகி, அன்று அமராவதியில் இருந்து தொடங்கி பல போராட்டங்ளுடன், ரேஸ் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் மாறி இன்றும்கூட அஜித்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. அவரது படங்களில், கல்லூரிவாசல், ஜி, ஆழ்வார், ஏகன், அசல் போன்ற தோல்விப்படங்களை கொடுத்திருந்தாலும் இன்றும் கூட அவரது ரசிகர்கள் அவருக்காக தியேட்டருக்குச் சென்று அவரது படத்தைப் பார்த்துத் திருவிழாவைப் போல் கொண்டாடுகின்றனர்.
 
நடிகர் அஜித்தின் இந்த வெற்றிக்கும் ரசிகர்களின் அன்புக்கும் அவரது கடுமையாக உழைப்பும் முயற்சியும் தான் காரணம் என பலரும் புகழுகிறார்கள்.
 
சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக்க முயற்சிக்கும் நிலையில், அவரோ தனது ரசிகர் மன்றங்களை கலைந்து அவர்களிடம் அம்மா, அப்பாவுக்கு கடமை ஆற்றுங்கள் அறிவுரை கூறினார்.
 
சமீபத்தில் கூட அவர் தான் அரசியலுக்கு வரவில்லை தனது கவனம் சினிமாவில் நடிப்பது மட்டும் தான் என்று கூறி அவர் தனக்கும்  ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்தார். 
அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நடிகர் அஜித்தை எப்போதும் புகழ்ந்து பேசுகின்றனர். இடையார் பாளையம் முதற்கொண்டு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் வரைக்கும் அலுமா டோலுமா பாடலைக் கேட்டாலே மனதில் புத்துணர்ச்சி அலைபாய்கிறது. எல்லா நடிகர்களுக்கும் இந்த ஆசிர்வாதம் கிடைக்காது. ஆனால் தன்னம்பிக்கை நடிகர் அஜித்தை மட்டும் எல்லோருக்கும் பிடிக்கின்றது.
 
தானுண்டு தன்வேலை உண்டு என்று ரசிகர்களின் அன்பில் நனைந்து தன் உழைப்பின் வலிமையுடன் இருக்கும் நடிகர் அஜித், இன்று போல் என்றும்  பல வெற்றிப்படங்களை கொடுக்க வாழ்த்துவோம்.