செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (15:58 IST)

இசை பயணத்தை தொடங்கியது குட்டி இசைப்புயல் – ட்ரெண்டாகும் “சகோ” பாடல்

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை  தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கியுள்ளார் ஏ ஆர் அமீன்
 

இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர்.

இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இப்பாடலைப் பற்றி  அமீன் கூறும்பொழுது,"நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்ப்பை பெறுவேன் என்று நம்புகிறேன்."

இப்பாடலைப் பற்றி இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் கூறும்போது," ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும்,நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. A R  அமீன்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன்."

அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.  மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும்  ரசிகர்களிடையே  பெரிய எதிர்பார்ப்பினை  உண்டாக்கும்.

ஸ்ரீதர் சுப்பிரமணியன், (தலைவர்: இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், சோனி மியூசிக்) பேசும்போது,"இது ஒரு விசேசமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் எங்களுக்கு. இந்தக் குடும்பத்துடன் எங்களது உறவு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது - திரைப்படப் பாடல் இல்லாத ஏ ஆர் ரஹ்மானின் முதல் பாடலான வந்தே மாத்திரம் தொடங்கி, எண்ணிலடங்கா பாடல்கள் உட்பட இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாடல் வரைக்கும் நாங்கள் இணைந்து இருப்பது மகிழ்ச்சி.

அமீன்  ஒரு திறமை  வாய்ந்த கலைஞர் ஆவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. உலகிலேயே மிகச் சிறந்த இசைக் கலைஞரால் பயிற்சி அளிக்கப்பட்ட  அமீன், பிறந்ததில் இருந்தே இசையால் சூழப்பட்டு இருந்தவர்.அமீனின் இன்னிசை அவரது மனதில் இருந்து புறப்படுகிறது" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, "சகோவை நாங்கள் வெவ்வேறு தளங்களில் மார்க்கெட்டிங் செய்ய ஒரு பெரிய பரவலான மார்க்கெட்டிங் பிளான் வைத்துள்ளோம். அவரது இசை லட்சோப லட்சம் மக்களை உலகம் முழுவதும் சென்றடையும். அவருக்கு எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறோம்."என்றார்.

தனித்தன்மை வாய்ந்த இந்தப்பாடல் 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 வின் (7UP Madras Gig Season 2) கடைசிப் பாடலாக வெளியாகியுள்ளது. 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 சோனி மியூசிக்கால் உருவாக்கப்பட்ட ஒரு இசை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.