கதை திருட்டு விவகாரம் பிளஸ்ஸா? மைனஸா? –தீபாவளி ரிலீஸ் படங்கள் முன்னோட்டம்
சர்கார் கதைத் திருட்டு விவகாரம் நேற்றோடு முடிந்ததை அடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. சர்கார் கருவாகி உருவாகிய விதம் குறித்து ஒரு பார்வை
விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படமான சர்கார் தீபாவளி ரிலீஸை முன்னிட்டு பரபரப்பாகத் தயாரானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்கள் இரண்டும் இதேப்போல தீபாவளி ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளதால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இந்த கூட்டணியை வலுப்படுத்தும் அம்சமாக சில வருடங்களுக்குப் பின் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருப்பது கூடுதல் பலம். விஜய்யின் அரசியல் வருகையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் கதை, சன் பிக்சர்ஸின் வித்யாசமன ஆடியோ ரிலீஸ் என பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்த சர்கார், டீஸர் ரிலீஸான அன்று தனது முதல் பிரச்சனை சந்தித்தது.
சர்கார் டீசரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வருண் ராஜேந்திரன் என்கிற உதவி இயக்குனர் அது தன்னுடைய செங்கோல் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு திரை எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அவரது புகாரை ஏற்று விசாரித்த சங்கத் தலைவர் பாக்யராஜ் இரு கதைகளையும் படித்துப் பார்த்து இருகதைகளின் சாராம்சமும் ஒன்றுதான் எனக்கூறினார். இது தொடர்பாக முருகதாஸை சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார். ஆனால் பிடிகொடுக்காத முருகதாஸ் வழக்கை கோர்ட்டில் சந்தித்துக் கொள்கிறேன் எனக் கூறிச்சென்றார்.
இதனால் வருணுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்தது. அந்த கடிதம் நீதிமன்றத்தில் வருண் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூற உதவும் என கூறப்பட்டது. இதற்கிடையில் விஜய்யும் சன்பிக்சர்ஸும் இந்த விவகாரத்தில் முருகதாஸை தனியாக கழட்டிவிட்டதால் முருகதாஸ் தனியாக இந்த வழக்கை எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவானது. ஏற்கனவே கதை திருட்டு விவகாரத்தில் முருகதாஸ் சிக்கியிருப்பதாலும், பாக்யராஜின் ஆதரவும வருண் பக்கம் இருந்ததாலும் முருகதாஸை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். பழைய புகார்களை தூசி தட்டி எடுத்து ட்ரோல், மீம்ஸ் என உலாவ விட்டனர். தீர்ப்பும் வருணுக்கு சாதகமாகவே வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் வேறுவழியின்றி இறங்கிவந்த முருகதாஸ் கோர்ட்டில் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டார். அதில் கதை வருணுடையதுதான் என்றும் படம் தொடங்குவதற்கு முன் வருணின் பெயர் இடம்பெறும் என்றும் முருகதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. வருணுக்கு ஒரு பெரும் தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நெட்டிசன்களின் மீம்ஸ்கள் அதற்கு விஜய் ரசிகர்களின் எதிர்வினை என கடந்த வாரம் முழுவதும் சர்கார் ஹாட் டாப்பிக்காக உலாவந்தது படத்திற்கு சாதகமாக அமையுமா அல்லது படத்தின் வியாபாரத்தைப் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காலா பட ரிலீஸின் போது ரஜினி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசிய சர்ச்சையான பேச்சால் காலாவின் வசூல் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த கதை திருட்டு விவகாரம் சர்கார் படத்தின் மீது ஒரு புறக்கணிப்பு மனநிலையை உருவாக்கும் எனப் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த சர்ச்சை தொடர்பான விவாதங்கள் படம் நன்றாக இருப்பின் அதற்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.
விஜய்யின் கடைசி படமான மெர்சல் பெரிய வெற்றி பெற்றிருப்பதால் விஜய்யின் மார்க்கெட் தற்போது விரிவடைந்துள்ளது. அதனால் பல ஏரியாக்களில் நம்பவே முடியாத தொகைக்கு சர்கார் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். மேலும் தீபாவளி வெளியீட்டிற்கு வேறெந்த பெரிய படங்களும் போட்டியில் இல்லாததால் சர்கார் படமே பெருவாரியான தியேட்டர்களை அலங்கரிக்கும். அதனால் பணிடிகை விடுமுறையில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் நவம்பர் 16-ந்தேதிக்கு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே ஆர் கே சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி மட்டுமே சர்காரோடு மோத இருக்கிறது. பில்லா பாண்டி படத்தில் ஆர் கே சுரேஷ் அஜித் ரசிகராக நடித்து இருப்பதால் அஜித் ரசிகர்களின் ஆதரவு தங்கள் படத்திற்கு இருக்குமென படக்குழு எதிர்பார்த்து வருகிறது.