1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (17:48 IST)

விஜய்சேதுபதியின் விளம்பரத்திற்கு இந்து மதம் தான் கிடைத்ததா? காவல்துறையில் புகார்

இந்துமத கடவுள்கள் குளிப்பது மற்றும் டிரஸ் மாற்றுவது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய்சேதுபதி பேசிய சர்ச்சை பேச்சின் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு இந்து மத அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அகில இந்திய இந்து மகாசபா என்ற அமைப்பு காவல்துறை ஆணையரிடம் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதவது:
 
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லாருக்கும் காட்ட தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்கள் உடைமாற்றும் நிகழ்வை காட்டக்கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டது போல கற்பனையாக சொல்வது இந்து மதத்தையும் அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோவில்களில் நடக்கும் ஆகமவிதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதில் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார் 
 
அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்று உள்ளது. அதில் இந்துமத கோவில்களில் அபிஷேக அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய இந்துமகா சபை கேட்டு கொள்கிறது என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
விஜய்சேதுபதி மீதான இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்