16 வயதினிலே தயாரிப்பாலர் S A ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா அஞ்சலி!
பாரதிராஜா இயக்கத்தில் கமல் ரஜினி ஸ்ரீதேவி ஆகிய மூவரும் நடித்து தமிழ் சினிமா உலகையே புரட்டிப்போட்ட திரைப்படங்களில் ஒன்று 16 வயதினிலே. அதுவரை தமிழ் சினிமாவில் கிராமம் என்றால் ஸ்டூடியோக்களில் போடப்பட்ட அரங்கமாகவே இருந்த நிலையில் அதைமாற்றி ரத்தமும் சதையுமாக கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டிய திரைப்படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் அம்மன் கிரியேஷன்ஸ் எஸ் ஏ ராஜ்கண்ணு இன்று காலமாகியுள்ளார். 16 வயதினிலே மட்டும் இல்லாமல் கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலே, மகாநதி என ஏராளமான படங்களை தயாரித்துள்ள அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளி திரு S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்துக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.