விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள யட்சன் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு படம். படம் குறித்தும், படத்தில் நடித்தவர்கள் குறித்தும் விஷ்ணுவர்தன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
யட்சன் எப்படி உருவானது...?
ஆரம்பம் படத்துக்கு முன்பே இந்த படம் உருவாக வேண்டியது. எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ், பாலா) விகடன் வார இதழில் எழுதி வரும் கதைக்கு என்னுடைய பெயரை உபயோகப்படுத்த அனுமதி கேட்டார்கள். நான் அதற்கு சம்மதித்துவிட்டு, கதையின் கருவை கேட்டேன். எனக்கு அது மிகவும் பிடித்துப் போய் நிச்சயம் இந்த கதையை படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
கதையை அப்படியே எடுத்திருக்கிறீர்களா?
கதையை படமாக்க முடிவு செய்தவுடன் திரைக்கதையை மிக நுணுக்கமாக எழுதி, அதை முற்றிலும் புதிய கோணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். யட்சன் ஆக்ஷன் காமெடிப் படமாக தயாராகியுள்ளது.
ஆர்யாவின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது?
கதைப்படி நாயகன் ஆர்யா, சின்னா என்னும் கதாபத்திரத்தில் தூத்துக்குடிகாரராக நடித்துள்ளார். அவர் ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு சென்னைக்கு வருபவராக நடித்துள்ளார்.
இன்னொரு நாயகன் கிருஷ்ணா...?
கிருஷ்ணா, கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி கார்த்திக்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். வீட்டுக்கு பயந்த கிருஷ்ணாவை நாயகி சுவாதி மிரட்டி கோடம்பாக்கத்துக்கு கூட்டி வருவார்.
இது ஏற்கனவே வெளிவந்த கதை என்பதால், அதனை படித்தவர்களுக்கு சுவாரஸியம் கிடைக்குமா?
இந்த கதையை ஏற்கனவே படித்தவர்கள் கூட படமாக பார்க்கும் போது ஆச்சிரியப்படுவார்கள். அந்த அளவுக்கு படம் புதுமையாக வந்துள்ளது.
தீபா சன்னதியின் கதாபாத்திரம் என்ன மாதிரி...?
தீபா சன்னிதியின் கதாபாத்திரத்தை நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னேரே சொல்லும் ஆற்றல் படைத்தவராக உருவாக்கியுள்ளோம். சென்னையில் இவரை சந்தித்தபின் ஏற்படும் மூன்று நாள் திருப்பங்களை சுவாரஸியமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறேnம்.
யட்சனின் மேக்கிங் எப்படி வந்துள்ளது?
வழக்கமாக நான் படத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வேன். இந்த படத்திலும் அதைப்போலவே நிறைய உழைத்துள்ளேன். படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும்/ கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். படத்தை இந்தியிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்து வெளியிட இருக்கிறேnம்.