வியாழன், 26 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : சனி, 9 ஏப்ரல் 2016 (10:52 IST)

ஒரேயொருவர் மட்டும் நடித்திருக்கும் மற்றொருவன் - இயக்குனர் மஜோ மேத்யூ, நடிகர் ரியாஸ்கான் பேட்டி

ஒரேயொருவர் மட்டும் நடித்திருக்கும் மற்றொருவன் - இயக்குனர் மஜோ மேத்யூ, நடிகர் ரியாஸ்கான் பேட்டி
தமிழில் வருடந்தோறும் 200 க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் வித்தியாசமான முயற்சி என்று பார்த்தால் ஒன்றோ இரண்டோ திரைப்படங்கள் இருக்கும். அந்த இரண்டும் சமயத்தில் ஆர்வக்கோளாறின் வெளிப்பாடாக பல்லிளிக்கும்.


 

 
இப்படியொரு சூழலில், ஒரேயொருவர் மட்டும் நடித்துள்ள மற்றொருவன் என்ற திரைப்படத்தை மஜோ மேத்யூ என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
 
அந்த ஒரேயொரு நடிகர், ரியாஸ்கான். படம் ககுறித்து இவர்கள் அளித்த பேட்டி வருமாறு... 
 
மஜோ மேத்யூ
 
ஒரேயொரு நடிகரை மட்டும் வைத்து எப்படி ஒரு படம்...?
 
இந்தப் படத்தின் கதைப்படி ஒரே ஒரு பாத்திரம்தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார்.
 
மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே.எம்.செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர். ஒரு நல்ல படத்தின் கதை, தனக்கான ஆட்களைத் தானே தேடிக்கொண்டு உருவாகும் என்பதற்கு இப்படமே உதாரணம் எனலாம்.
 
இது என்ன மாதிரியான கதை? 
 
இது உளவியல் சார்ந்த கதை. ஆனாலும் எல்லாருக்கும் புரிகிற மாதிரியான முழுமையான கமர்ஷியல் படம்தான் இது. நாயகன் ஒவ்வொரு விஷயத்தையும் கனவு காண்பான்.
 
கனவில் காண்பது எல்லாம் நேரில் நிஜத்தில் ஒவ்வொன்றாக நடக்கிறது. ஒரு பெரிய கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பதே க்ளைமாக்ஸ். 
 
நாயகன் தவிர வில்லன் உள்பட யாருமே இல்லாத படத்தை எப்படி கமர்ஷியல் படம் என்கிறீர்கள்?
 
நாயகனுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது நிழலாகவே அறிய முடிகிறது. அது யார் என்பது சஸ்பென்ஸ். படத்தில் அந்த ஒரு நாயகனாக ரியாஸ்கான் நடித்துள்ளார். அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது என்பேன். எதிர்பார்த்தபடி நடித்து அசத்தியும் இருக்கிறார். 
 
ரியாஸ்கான்
 
இதுவரை பலபேர் நடிக்கும் படத்தில் நடித்த உங்களுக்கு, தனியாக நீங்கள் மட்டுமே நடித்தது புதிய அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா?
 
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஜப்பான் மொழி வரை 300 படங்கள் நடித்திருக்கிறேன். இவற்றில் எந்தப் படத்திலும் வராத வித்தியாச வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது.
 
அந்த அனுபவம் எப்படி இருந்தது?
 
பத்து படங்களில் நடித்த அனுபவம் இந்த ஒரே படத்தில் கிடைத்தது. படப்பிடிப்பில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை. சவாலும் நடிப்பு வாய்ப்பும் நிறைந்த பாத்திரம் இது.

ஒரேயொருவர் மட்டும் நடித்திருக்கும் மற்றொருவன் - இயக்குனர் மஜோ மேத்யூ, நடிகர் ரியாஸ்கான் பேட்டி

 

 
என்மேல் நம்பிக்கை வைத்து வழங்கப்பட்டதை என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறேன்.
 
படத்தில் வேறு எந்த உயிரினங்களும் கிடையாதா?
 
சுமார் ஒரு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தில், என்னைத் தவிர ஒரு நாயும், யானையும் மட்டுமே படத்தில் வரும். 
 
படம் எப்போது திரைக்கு வருகிறது? 
 
அடுத்த மாதம் மே யில் கோடை ஸ்பெஷலாக வருகிறது.