அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பதுதான் ஜோக்கர் - இயக்குனர் ராஜு முருகன் பேட்டி
அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பதுதான் ஜோக்கர் - இயக்குனர் ராஜு முருகன் பேட்டி
பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது, ராஜு முருகனின் ஜோக்கர்.
அரசியல் நையாண்டியுடன் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்களை பாலா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். விழாவில் படம் குறித்து ராஜு முருகன் பேசியவை இங்கே உங்களுக்காக...
யாருக்கு நன்றி சொல்ல விருப்பம்...?
நான் எப்போதுமே எனக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது கண்ணன் சார், லிங்குசாமி சார் இரண்டு பேரையும் நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தை எடுக்க ஒரு நல்ல கரம் தேவைப்பட்டது. அந்த சுதந்திரத்தை கொடுத்து எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவருக்கு நன்றி என்ற வார்த்தையை தாண்டி ஏதாவது இருந்தால் சொல்லிக்கிறேன்.
ஜோக்கர் படம்...?
ஜோக்கர் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படம் ஓடும், ஓடாது, பிடிக்கும், பிடிக்காது பத்தியெல்லாம் எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அதுமேல எனக்கு பெரிய நம்பிக்கையும் கிடையாது. அது மாதிரி எந்த எண்ணமும் இந்த கதையை எழுதும்போது எனக்கு இல்லை. இப்பவும் இல்லை. இது ரொம்ப எளிமையான சின்ன படம். இந்தப் படம் சில விஷயங்களை கிரியேட் பண்ணும்னு நான் நம்புறேன்.
கதை என்ன...?
இங்கே மார்க்கெட் பண்றவங்க, ஒட்டு கேட்கிறவங்க எல்லோருமே எதுவும் தெரியாத 6 கோடி மக்களைத்தான் டார்கெட் பண்றாங்க. அடிப்படை அறிவு இல்லாத அல்லது புரிதல் இல்லாத 6 கோடி மக்கள்தான் அவர்களது டார்கெட்டாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் 30 கோடி இந்தியர்ல 2 கோடி பேர்தான் பங்கெடுத்துகிட்டாங்க. அப்படித்தான் இன்னைக்கும் 100 கோடி பேர்ல பத்து கோடி பேர்தான் தெளிவா இருக்காங்க. எதையும் கண்டுகொள்ளாத அல்லது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப மாறிக் கொள்ளும் மக்களை மட்டுமே டார்கெட்டாக வைத்து அதிகாரம் செய்படுகிறது. அதை நோக்கி கேள்வி கேட்கிறதுதான் இந்த ஜோக்கர்.
பாடலாசிரியர் யுகபாரதி...?
யுகபாரதியின் தந்தை பரமசிவம் அவர்கள் தஞ்சாவூர் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளராக இருந்தவர். அவர்களது வீட்டில் இருந்த கம்யூனிஸம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய படித்திருக்கேன். அங்கிருந்துதான் எனக்கு அந்த அறிவு வந்தது.
பாடல்கள்...?
அரசியல் மேடைகளிலும், கூத்துகளிலும் பாடும் கலைஞர்களை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறோம். இதில், "எவரோ விதைத்த வயல், விதைத்தவர் மரித்த பின்னும், பசித்தவன் உயிர்ப்பான் அவனால், அவனே என் தோழன்.
எவரோ நெய்த உடை, நெய்தவன் மரித்த பின்னும் வறியவன் வாழ்வான், அவனே என் தோழன்..."
என்று ஒரு பாடல் வரும். இந்தப் பாடல்தான் இந்தப் படம்.
ஜோக்கர் படம், இயக்குனர் ராஜு முருகன், பாடலாசிரியர் யுகபாரதி, தமிழ் சினிமா,