வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2016 (11:57 IST)

என் மூச்சே சினிமாதான் - எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

என் மூச்சே சினிமாதான் - எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

எஸ்.ஏ.சந்திரசேகரன் படம் இயக்குவதை நிறுத்தி, நடிப்பில் கவனம் செலுத்துகிறார். இளம் இயக்குனர் விஜய் கிரணின் நையப்புடை படத்தில் எஸ்.ஏ.சி.தான் நாயகன். தனது பட அனுபவம் குறித்து அவர் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


 
 
இளவயது இயக்குனரின் படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
 
நான் இதுவரை 70 படங்களை இயக்கியுள்ளேன். எனக்கு 73 வயதாகிறது. என்னை 19 வயது இயக்குனர் விஜயகிரண், நையப்புடை என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார். 19 வயதுக்கும் 73 வயதுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். பலரை இயக்கிய என்னை 19 வயது இளைஞர் இயக்கிய போது படப்பிடிப்பின் முதல் 3 நாட்கள் எனக்கு திருப்தி இல்லை. படப்பிடிப்பை நிறுத்திவிடலாம் என்று கூட நினைத்தேன். 
 
தொடர்ந்து நடிக்கும் நம்பிக்கை எப்படி ஏற்பட்டது?
 
அவர் எடுத்த 3 நாள் காட்சிகளை போட்டு பார்த்தபோது தான் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
 
வயதானவர்கள் பார்க்கும்படியான படமா இது?
 
தியேட்டருக்கு தற்போது 15 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் தான் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்றவாறு 73 வயதான என்னை நடிக்க வைத்துள்ளார். 
 
படத்தில் உங்கள் கதாபத்திரம்?
 
நான் ஒரு ராணுவ வீரன். கதாநாயகன் பா.விஜய் ஒரு பத்திரிகை நிருபர். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு போலீஸ் அதிகாரி. நான் கடவுள் ராஜேந்திரனும் நடித்துள்ளார். 
 
படத்தின் கதை என்ன?
 
எங்கள் நான்கு பேருக்கிடையே நடக்கும் சம்பவம் தான் நையப்புடை படத்தின் கதை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்பது தான் படத்தின் கரு. 
 
வயதான காலத்தில் படத்தில் நடிக்க என்ன காரணம்?
 
என் மூச்சே சினிமா தான். எனவே இந்த வயதிலும் நடிக்கிறேன் என்றால் அதற்கு சினிமா மீது உள்ள பிடிப்பு தான் காரணம். இந்த படத்தை போன்று நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். 
 
இன்றைய இளம் இயக்குனர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
 
கதை, வசனம் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் விறுவிறுப்பாக படமாக்குவது தான் முக்கியம்.  அந்த திறமை தற்போது சினிமா உலகுக்கு வரும் இளைய இயக்குனர்களிடம் நிறைய உள்ளன. அவர்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளன.