அமெரிக்காவை மட்டுமல்ல; உலகையே குலுக்கிய மாவீரன் முகமது அலி!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 6 ஜூன் 2016 (11:51 IST)
அது 1967ம் ஆண்டு ஏப்ரல் 29ம் நாள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகர் ஹூஸ்டன் மாநகரம். உயர்ந்து நிற்கும் பழைய தலைமை அஞ்சலக கட்டிடத்தில் ஒரு அறையில் 11 பேர் வரிசையாக நிற்கிறார்கள்.
 
 
ஒவ்வொருவராக பெயர் அழைக்கப்படுகிறது. பெயருக்குரியவர்கள் சென்று, விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கறுப்பினத்தைச் சேர்ந்த, முஸ்லிம் பெயரை தாங்கிய அந்த இளைஞனின் பெயர் அழைக்கப்படுகிறது. சில நிமிடங்கள் ஆகியும் அந்த இளைஞன் முன்னால் சென்று சல்யூட் அடிக்கவில்லை. அப்போதுதான் நிமிர்ந்தே பார்க்கிறார்.
 
அந்த இளைஞனின் பெயரை அழைத்த அதிகாரி, அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர். பெயரை சொன்னதுமே முன்னால் வந்து மரியாதை செலுத்தாதது அந்த ராணுவ அதிகாரியை பொறுத்தவரை பெரிய குற்றம்தான். ஆனால் அதையும் விட பெரிய குற்றத்தை செய்தான் அந்த இளைஞன்.
 
“மிஸ்டர் அலி, கொஞ்சம் முன்னால் வருகிறீர்களா?” என்றார். அலி ஒன்றும் பேசவில்லை.
 
 
உடனே பதறிப்போன சேவக அதிகாரிகள் சிலர், அந்த இளைஞனை அறைக்கு வெளியே அழைத்து வந்து, இதற்கு நீ ஒப்புக் கொள்ளாவிட்டால் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா என மிரட்டி பணியவைக்க முயன்றார்கள். பின்னர் மீண்டும் அறைக்கு அழைத்துச் சென்று சில நிமிடங்கள் அவகாசம் தந்தார்கள்.
 
மீண்டும் பெயர் அழைக்கப்பட்டது. மீண்டும் சல்யூட் அடிக்க மறுத்தான் அந்த இளைஞன். ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்தான் அந்த இளைஞன். உங்களது முயற்சிக்கு என்னால் ஒத்துழைக்க முடியாது என்று, கோபம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரியின் முன்னால் கடகடவென எழுதி கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு வெளியேறினான்.
 

 
நேராக அந்த ஹூஸ்டன் மாநகரின் பெடரல் நீதிமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் கூடியிருந்த தனது சக இளைஞர்களோடு கரம்கோர்த்தான். விண்ணதிரும் முழக்கம் எழுந்தது... ஓ.. அமெரிக்காவே... வியட்நாமை தாக்காதே...! அடுத்தகணமே அந்த இளைஞனின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.
 
உலக குத்துச் சண்டை அசோசியேசன், நியூயார்க் குத்துச் சண்டை கமிஷன், டெக்ஸாஸ் குத்துச் சண்டை கமிஷன் ஆகிய அமைப்புகள் அந்த இளைஞனை உடனே வெளியேற்றுவதாக அறிவிப்பை வெளியிட்டன. வியட்நாமை தாக்காதே என்று அமெரிக்காவிலேயே பகிரங்கமாக முழக்கமிட்ட முதல் மாபெரும் சக்தி அந்த இளைஞன். அவனது பெயர் முகம்மது அலி.

“அவர்கள் ஏன் என்னை ராணுவச் சீருடை அணிந்து கொண்டு 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று அந்த அப்பாவி வியட்நாமிய ஏழை மக்கள் மீது குண்டு போடச் சொல்கிறார்கள்; அவர்களை துப்பாக்கியால் சல்லடையாக துளைக்கச் சொல்கிறார்கள்; இங்கே எங்களது சொந்த ஊரான லூயிஸ் வில்லேயில் கறுப்பின நீக்ரோ மக்களை நாய்களை போல நடத்துகிற இவர்கள், வியட்நாமிய மக்களிடம் என்ன குறை கண்டார்கள்.
 
இங்கே மனித உரிமைகளை முற்றாக புறந்தள்ளுகிற இவர்கள், வியட்நாமிய மக்களுக்கு பாடம்புகட்ட நினைப்பதாக கூறுவதில், என்ன அர்த்தம் இருக்கிறது?இல்லை, நான் செல்ல மாட்டேன். 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று அந்த ஏழை நாட்டின் மக்களை படுகொலை செய்வதற்கும், நாட்டையே எரித்து சாம்பலாக்குவதற்கும் நான் உதவ மாட்டேன்; இவர்கள் ஏன் அதை செய்ய விரும்புகிறார்கள்... உலகம் முழுவதும் கறுப்பு நிறமாக உள்ள அனைத்து மக்களையும் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள்;

அந்த அடிமைத்தனம் தொடர வேண்டுமென்று விரும்புகிறார்கள். இத்தகைய தீமைகளுக்கு ஒரு முடிவு கட்டுகிற நாளாக இந்த நாள் அமையட்டும். நான் இந்த முடிவினை எடுத்தால் என்ன கதி நேரிடும் என்பது எனக்கு தெரியும். அவர்களே பகிரங்கமாக மிரட்டினார்கள். நான் குத்துச் சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் என்ற முறையில் உருவாக்கி வைத்திருக்கிற எனது கவுரவம் பறிக்கப்படும் என்று மிரட்டினார்கள். அதன்மூலம் லட்சக்கணக்கான டாலர் வருமானத்தை இழக்க நேரிடும் என்று மிரட்டினார்கள்.

ஆனால், நான் எனது நிலைபாட்டில் உறுதியாக நிற்கிறேன். நான் அதை எப்போதும் உரக்கச் சொல்வேன். எனது மக்களின் உண்மையான எதிரிகள் வியட்நாமில் இல்லை; உண்மையான எதிரிகள் இங்கேயே இருக்கிறார்கள். நான் எனது மக்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை; நான் வரித்து கொண்ட மதத்திற்கு துரோகம் செய்ய விரும்பவில்லை; தங்களது சொந்த விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்திற்காக வியட்நாமில் போராடிக் கொண்டிருக்கிற மக்களுக்கு எதிரான ஒரு அடிமைக் கருவியாக ஒருபோதும் என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

வியட்நாமில் யுத்தம் நடத்தினால், அந்த யுத்தம் எனது சொந்தங்களான 22 மில்லியன் அமெரிக்க கறுப்பின மக்களுக்கு சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வருமானால், இதோ எனது பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.. நாளைக்கே நான் ராணுவ வீரனாக புறப்படுகிறேன்.
 
ஆனால், வியட்நாம் மீதான யுத்தத்தால் எனது மக்களுக்கு எந்த விடுதலையும் கிடைக்கப் போவதில்லை. எனக்கு தெரியும், என்னை சிறையில் அடைப்பார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் நாங்கள் 400 வருடங்களாக சிறையில்தான் இருக்கிறோம்” கூடியிருந்த இளைஞர்களிடையே கர்ஜித்தான் முகம்மது அலி.
 
அப்போது அவனுக்கு வயது 26 மட்டுமே. கேஸியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட கிறிஸ்தவ கறுப்பின இளைஞன், தனது பெயரை 1964ம் ஆண்டு தனது 22வது வயதில் முதல்முறையாக ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, முஸ்லிமாக மதம் மாறி முகம்மது அலி என மாற்றிக் கொண்டான்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க....


இதில் மேலும் படிக்கவும் :