1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (16:53 IST)

நானும் இனரீதியான அவதூறை எதிர்கொண்டுள்ளேன் – அஷ்வின் ஆதங்கம்!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் தானும் இன ரீதியான அவமரியாதையை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் நிறவெறி தாக்குதல் பேச்சுகள் எழுந்துள்ளன. நேற்று மைதானத்தில் பீல்ட் செய்து கொண்டிருந்த சிராஜை சில பார்வையாளர்கள் நிற ரீதியாக தாக்கி பேசியுள்ளனர். இதுகுறித்து போட்டி முடிந்ததும் நடுவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் மீண்டும் அதுபோல சிலர் சிராஜ் மற்றும் பூம்ரா ஆகியோரை நிற ரீதியாக தாக்கிப் பேசியுள்ளனர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு நடுவரிடம் புகாரளித்தனர். இதையடுத்து அவ்வாறு பேசிய 6 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரே இந்திய வீரர்கள் பந்துவீசினர்.இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அவ்வாறு பேசிய ஆறு பேரும் நிரந்தரமாக கிரிக்கெட் அரங்குக்குள் நுழைய முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நானும் இன ரீதியான அவதூறை இதற்கு முன்னர் அனுபவித்துள்ளேன். அவற்றில் சில சொற்கள் மிகவும் ஆபாசமானவை. நான் ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது முறையாக வந்துள்ளேன், நான் முதல் முதலாக 2011 ஆம் ஆண்டு வந்தபோதே இதை எதிர்கொண்டுள்ளேன். ஒரு முறை அல்லது இருமுறை வீரர்கள் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால் கீழ்தளத்தில் இருக்கும் ரசிகர்கள் இதுபோல அடிக்கடி நடந்துகொள்கிறார்கள். இந்த முறை எல்லை மீறி இனவெறியுடன் பேசுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களை விட சிட்னியில்தான் இது அதிகமாக உள்ளது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.’ எனக் கூறியுள்ளார்.