புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam

விளையாட்டுத்துறை பெண்களுக்கு திருமணம் நடக்காதா? சானியா மிர்சா ஆவேசம்!

விளையாட்டுத்துறையில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் நடக்காது என்று கூறுவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

உலக அளவில் புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளார். குழந்தை பிறந்த பின்னர் தற்காலிகமாக டென்னிஸ் போட்டிக்கு ஓய்வு கொடுத்த சானியா, மீண்டும் விரைவில் களமிறங்கவுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சானியா மிர்சா கூறுகையில், ‘தான் சிறுமியாக இருந்தபோது வெளியில் சென்று விளையாடினால் வெயில்பட்டு, உடல் கருத்து விடும் என்றும் கருப்பாகி விட்டால் தன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் தனது உறவினர்கள் கூறியதை ஞாபகப்படுத்தினார்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விளையாட ஆர்வமுள்ள பெண்களிடம் இதுபோன்று  கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அப்படியே கூறினாலும் உறவினர்கள் பேச்சை தான் கண்டுகொள்ளாமல் இருந்தது போல் விளையாட்டுத்துறை பெண்கள் அதனை கண்டுகொள்ளாமல் சாதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சானியா கூறினார்.

மேலும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் நமது மனைதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை நியாயப்படுத்த சிலர் முயல்வதாகவும், இந்த கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் சானியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்