ரஷித் கான் ஹாட்ரிக் – தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் !

Last Modified திங்கள், 25 பிப்ரவரி 2019 (15:45 IST)
அயர்லாந்துக்கு எதிரான 3 ஆவது டி 20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

சமீபகாலமாக ஆஃப்கானிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் பல நம்பிக்கையளிக்கும் சாதனைகளை செய்து வருகிறது. அந்த அணியின் ரஷீத் கான் மற்றும் முகமது நபி ஆகிய வீரர்கள் வளரும் இளம் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். அந்த அணியின்  வெற்றிப்பாதையில் மீண்டும் ஒரு வெற்றியாக அயர்லாந்து அணிக்கெதிரான டி 20 தொடரை வென்று அசத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடந்தது. 3-வது போட்டி நேற்று நடந்த நிலையில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முகமது நபியின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின்னர் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் கெவின் ஓ பிரையன் அதிகபட்சமாக 74 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடததால் அந்த அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை எடுத்து அசத்தினார். தான் வீசிய 16 ஆவது ஓவரின் கடைசிப் பந்திலும் 18 ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :