பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு தடையா?
கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட தடை விதிப்பது கடந்த சிலகாலமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர் மற்றும் இந்தியாவின் ஹர்த்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர்களுக்கு ஏற்கனவே விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
நேற்று முன் தினம் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது வான்டர் டஸ்சென் மற்றும் பெஹ்லுகுவாயோ ஆகியோர் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாத ஆத்திரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, 'ஹே கருப்பு நண்பரே. இன்று உன்னுடைய தாய் எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்? என பேசியுள்ளார். இந்த பேச்சு ஸ்டெம்ப் மைக் மூலம் உலகம் முழுவதும் போட்டியை ரசித்தவர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் நிறவெறி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து சர்ப்ராஸ் அகமதுவின் இனவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, சர்ப்ராஸின் இத்தகையை பேச்சுகளை ஆதரிக்க மாட்டோம்' என்றும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். ஐசிசியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சர்ப்ராஸ் அகமதுவுக்கு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'நடந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை என்றும், யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட நான் பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப்பொன்று தவறுகள் நடக்காது” என்றும் சர்ப்ராஸ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.