புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (19:57 IST)

இந்தியா-நியூசிலாந்து போட்டியும் ரத்து: ஆட்டநாயகன் மழை

தற்போது நடைபெற்று வருவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியா? அல்லது வருணபகவானின் கிரிக்கெட் போட்டியா? என்று கூறும் அளவிற்கு மழையால் போட்டிகள் ரத்தாகி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது
 
இந்த தொடரில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தோல்வியே அடையாததால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் டாஸ் கூட போடாமல் மழை காரணமாக போட்டி ஆரம்பிக்கப்படவே இல்லை. மழை விடும் என உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணி வரை காத்திருந்த நடுவர்கள், மழை நிற்பதற்கான அறிகுறியே தெரியாததால் சற்றுமுன் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் அளித்தனர். மொத்தத்தில் இன்றைய போட்டியில் மழை தான் ஆட்டநாயகன்
 
இதனால் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியாவது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.