பதிலுக்குப் பதில் கொடுத்த நியுசிலாந்து – தொடரின் முதல் வெற்றி !
நியுசிலாந்து உடனான டி 20 தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டித் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் முறையே 20 மற்றும் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆன நிலையில் அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு ராகுல் மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரிடியாக ஆடிய ராகுல் 87 ரன்களுடனும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் பதிலடிக் கொடுக்கும் விதமாக விளையாடினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் நிக்கோல்ஸ் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களத்துக்கு வந்த ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாத்தம் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். லாதம் அரைசதம் அடித்து அவுட் ஆக, இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த ராஸ் டெய்லர் சதமடித்து அசத்தினார்.
இதனால் அந்த அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலானத் தொடரில் அந்த அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.