வேட்டையாடிய வார்னர்; ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு
நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஒவர் முடிவில் 334 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், பின்ச் ஆகியோரின் கூட்டணியை பிரிக்க இந்தியா மிகவும் சிரமப்பட்டது. 34வது ஓவர் கடைசி பந்தில் வார்னர் 124 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த ஓவரில் பின்ச் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்மித் 3 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.
இதனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. இருந்தும் பீட்டர் ஹேண்ட்கோம் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.