செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:17 IST)

வரவிருக்கும் தமிழ் சினிமாக்கள்... சில காப்பிகள், சில தழுவல்கள்...

தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களில் கணிசமானவை பிறமொழிப் படங்களின் பாதிப்பில் உருவாக்கப்படுபவை. பல  நேரங்களில் அப்படியே அடிப்பார்கள், சிலநேரங்களில் சிலவற்றை மட்டும் அடிப்பார்கள். அப்படி விரைவில் தமிழில் வெளியாகவிருக்கும் சில படங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.

 
நயன்தாராவின் கொலையுதிர்காலம் படத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்ததுதான். சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம், 2016  -இல் ஹாலிவுட்டில் வெளியான ஹஸ் (Hush) திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. ஹஸ் படத்தில் வரும் நாயகி  ஒரு எழுத்தாளர். காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. தனியாக அவர் வசித்துவரும் வீட்டில் ஒருநாள் இரவு ஒரு  சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக் கொள்கிறார்.
 
கொலைகாரன் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் நுழையலாம். அதற்குள் நாயகி தப்பித்தாக வேண்டும். நாயகியின்  தோழியை (அவளை சைக்கோ ஏற்கனவே கொன்றிருப்பான்) தேடிவரும் காதலனையும் சைக்கோ கொன்றுவிடுகிறான்.  காயம்பட்டு வீட்டிற்குள் இருக்கும் நாயகி எப்படி தப்பித்தாள் என்பதுதான் படம்.
 
படத்தில் மொத்தம் 4 கதாபாத்திரங்கள். அதில் தோழியும், அவளது காதலனும் வருவது சொற்ப நேரமே. மீதி நேரம் முழுவதும்  நாயகி மற்றும் சைக்கோ கொலைகாரன் மட்டும். அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் நமது தமிழக பின்னணியில்  பொருந்திவராது. அதனால்தான் இந்தப் படத்தை லண்டனில் எடுக்கிறார்கள்.
 
சக்ரி டோலட்டி தனது படம் ஹஸ் படத்தின் தழுவல் கிடையாது என்று மறுத்துள்ளார். அதேநேரம், ஹஸ் படத்தின் நாயகி  கதாபாத்திரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். கொலையுதிர்காலம் எவ்வளவுதூரம் ஹஸ் படத்தை  ஒத்திருக்கிறது என்பது படம் வந்தபின் தெரியும்.
 
த்ரிஷா நடித்துவரும் நாயகி மையப்படம், கர்ஜனை. ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்தியில் வெளிவந்த என்ஹெச் 10  படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல். இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தை தமிழில் த்ரிஷா செய்கிறார்.
 
என்ஹெச் 10 படத்தின் ஆணவக்கொலை பின்னணி இயக்குனரின் சொந்த கற்பனை. ஆனால், படத்தில் அனுஷ்கா சர்மாவும்,  அவரது கணவனும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், துரத்தல்கள் அனைத்தும் 2008 -இல் வெளியான பிரிட்டன் படம், ஈடன்  லேக்கை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டது.
 
ஈடன் லேக் படத்தில் விடுமுறையை கழிக்க ஏரிக்குவரும் ஒரு தம்பதியை சில இளைஞர்கள் (சிலர் சிறுவர்கள்) கொடூரமாக  தாக்குகிறார்கள். மனைவி மட்டும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறாள். அவளை அவர்கள் துரத்துவதும், கடைசியில் அவள் ஒரு வீட்டில் தஞ்சமடைவதும், அந்த வீட்டைச் சார்ந்த இளைஞர்களும், சிறுவர்களும்தான் தாக்குதல் நடத்தியவர்கள் என்பது  தெரியவருவதும்தான் படத்தின் கதை. இளைஞர்கள் தாக்குதல் நடத்துவதற்கு எந்த காரணமும் படத்தில் சொல்லப்படுவதில்லை.  அது அவர்களின் ஹாபி.. பேஷன்...
 
என்ஹெச் 10 படத்தில் ஆணவக் கொலை என்று ஒரு காரணத்தை வைத்துள்ளனர். நாயகியின் கணவன் இறப்பது, நாயகி  தப்பித்து வீட்டில் தஞ்சமடைவது. அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் கொலைகாரர்கள் என்பது என ஈடன் லேக் படத்தின் கதை  முழுவதையும் என்ஹெச் 10 படத்தில் பார்க்கலாம். இதைத்தான் தமிழில் கர்ஜனை என்ற பெயரில் எடுத்து வருகின்றனர்.
 
அன்பழகன் இயக்கத்தில் பிரபுசாலமன் ரூபாய் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படம் 2010 -இல் வெளியான  ஹாலிவுட் படம், தி கேஷ் -ஐ தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்கு ஏற்ப கதையில் பல மாற்றங்களையும் செய்துள்ளனர். தி  கேஷ் படத்தை தழுவி, விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜீத், காசு என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படம்  வெளியாகி தோல்வியடைந்தது. இப்போது அதே கதையை ரூபாய் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.
 
காசு படத்தின் தோல்வியும், அதே கதையை படமாக்கியிருப்பதும் வியாபார சிக்கலை ஏற்படுத்தியதால் ரூபாய் படம் இன்னும்  வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
 
தமிழ் சினிமாவின் பிற தழுவல்கள், காப்பிகள் இன்னொரு கட்டுரையில்...