நேற்று நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. தலைவர், செயலாளர், பொருளாளர், இரு உப தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், நான்கு செயற்குழு உறுப்பினர்கள் பதவி தவிர்த்து மீதமுள்ள 25 பதவிகளையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கைப்பற்றியது.
கடைசிநேரம்வரை பரபரப்பையும், பதட்டத்தையும் தக்க வைத்த நேற்றைய நடிகர் சங்கத் தேர்தலின் முக்கிய துளிகளை பார்க்கலாம்.
1. சென்னை மைலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடந்தது. தேர்தலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீஸnர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் ஓய்வுபெற்ற நீதியரசர் பத்மநாபன் தலைமையில் நடந்தது.
2. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அதற்கு முன்பே இரு அணிகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்தனர்.
3. தமிழ் திரையுலகின் எந்த சங்கத்துக்கும் இதுபோன்று தேர்தல் நடைபெற்றதில்லை என்று கூறும் அளவுக்கு ஏழு மணியிலிருந்தே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. காலை ஒன்பது மணிக்கே 40 சதவீத வாக்குகள் பதிவாயின.
4. ஊடகங்கள் அனைத்தும் தேர்தல் நடந்த இடத்தில் குவிந்திருந்தன. அவர்களுக்கான முதல் தீனியை தந்தவர் நடிகர் ரஜினிகாந்த். வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் வெற்றி பெற்றாலும், உயிரைக் கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்ய முடியாது போனால், பதவியை ராஜினிமா செய்ய வேண்டும் என்றார். தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என்றதை ஊடகங்கள் பிடித்துக் கொண்டன.
5. அதன் பிறகு வாக்களிக்க வந்த அனைவரிடமும் இந்த பெயர் மாற்றம் குறித்து கருத்து கேட்டனர். சரத்குமார் அணியைச் சேர்ந்த விஜயகுமார், டி.ஆர். போன்றவர்கள் ரஜினியின் கோரிக்கையை ஆதரிக்க, பாண்டவர் அணியைச் சேர்ந்த ரோகிணி, விவேக் போன்றவர்கள் பெயர் மாற்றம் தேவையில்லை என்றனர்.
6. நேரம் செல்லச் செல்ல இரு தரப்பினரிடமும் மோதல் போக்கு வலுக்க ஆரம்பித்தது. வாய் வார்த்தைகள் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. விஷாலை தாக்கியதாகவும், அவர் மயக்கமடைந்ததாகவும் வந்த செய்தியைத் தொடர்ந்து அங்கு பதட்டம் உருவானது.
7. நடிகர் அல்லாத ஒருவர் தன்னை தாக்க முயன்றதாகவும், தன்னைஅடித்தாலும் பரவாயில்லை எலெக்ஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் என விஷால் கூறியதைத் தொடர்ந்து பதட்டம் ஓரளவு தணிந்தது.
8. ஆனாலும், எப்போது வேண்டுமானாலும் சண்டை மூளலாம் என்ற நிலையில், பிரச்சனை செய்தால் தேர்தலை தள்ளுபடி செய்வேன் என நீதியரசர் பத்மநாபன் இரு தரப்பினரையும் எச்சரிக்கை செய்தார். அதனைத் தொடர்ந்து பிரச்சனை கட்டுக்குள் வந்தது.
9. நடிகை சங்கீதா ஓட்டு அளிக்கும் இடத்துக்கே சென்று கான்வாஸிங் செய்ததாகவும், சரத்குமார் அதனைத் தட்டிக் கேட்க, அதை கேட்க நீ யார் என சங்கீதா சரத்குமாரை கேட்டதாகவும், அதனாலேயே பிரச்சனை எழுந்ததாகவும் சரத்குமார் தரப்பில் கூறப்பட்டது.
10. கமல் ஓட்டளிக்க வந்த போது அவரிடமும் சங்கத்தின் பெயர் மாற்றம் குறித்து கேட்கப்பட்டது. நார்த் இண்டியா, தென்னிந்தியா என இரண்டு சினிமாக்கள் இந்தியாவில் இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது இந்திய நடிகர் சங்கமாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று வழக்கம் போல அனைவருக்கும் அதிர்ச்சியூட்டினார்.
11. கமலின் பேச்சை வைத்து அடுத்த பரபரப்பை மீடியாக்கள் கிளப்பின. அதற்கு அனைத்துவகையிலும் ஒத்துழைத்தார், டி.ஆர். இந்திய நடிகர் சங்கம்னு கமல் சொல்றார். இங்க நடக்கிற தேர்தலுக்கு இந்தியிலிருந்து அமிதாப்பச்சன் வந்தாரா? இல்லை ஸ்ரீதேவி வந்தாரா? தமிழ்நாட்ல இருக்கிறவங்க மட்டும்தானே வந்தாங்க என்று போட்டுத் தாக்கி சூழலை சுவாரஸியமாக்கினார்.
12. ஓட்டளிக்க சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்தனர். சிலர் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரப்பட்டனர். அதேநேரம், அஜித், த்ரிஷா போன்றவர்கள் வாக்களிக்க வரவில்லை.
13. சின்னதாக நடந்த தள்ளு முள்ளு தவிர வேறு அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்தது.
14. மொத்தம் உள்ள 3139 உறுப்பினர்களில் 783 பேர் தபால் மூலம் தங்களின் ஓட்டை பதிவு செய்தனர். 1824 பேர்கள் நேரடியாக ஓட்டை பதிவு செய்தனர். ஆக மொத்தமாக 2607 பேர்கள் வாக்களித்தனர். நடிகர் சங்க சரித்திரத்தில் இத்தனை சதவீத வாக்குகள் (83 சதவீதம்) பதிவானது இதுவே முதல்முறை.
15. வாக்கு எண்ணும் பணியில் 40 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் சரத்குமார் அணியைச் சேர்ந்தவர்கள் முன்னிலை பெற்றனர். வாக்கு எண்ணிக்கை வெளியே இருந்தவர்களுக்கு திரையில் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டது. வெற்றி நமக்கே என சரத்குமார் அணியினர் ஆனந்தமாயினர்.
16. திடீரென, இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டதால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
17. நேரடியாக செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ண ஆரம்பித்தபின் நிலைமை மாறியது. பாண்வர் அணியினர் முன்னிலை பெற்றனர். விஷால் முதலில் வெற்றியை பதிவு செய்தார். விஷாலுக்கு 1445 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவிக்கு 1138 வாக்குகளும் கிடைத்தன. விஷாலின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. அதனை மதிக்கிறேன். தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என்றார் ராதாரவி.
18. அடுத்ததாக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார்த்தி 1493 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் 1080 வாக்குகளும் பெற்றனர்.
அடுத்த பக்கம் பார்க்க
19. தலைவர் பதவிக்கான போட்டி கடைசிவரை இழுபறியில் இருந்தது. பின்தங்கியிருந்த நாசர் ஒருகட்டத்தில் சரத்குமாரை முந்தினார். பிறகு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் முன்னிலை வகித்தார். கடைசியில் 1344 வாக்குகள் பெற்று நாசர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சரத்குமாருக்கு 1235 வாக்குகளே கிடைத்தன.
20. வெற்றி பெற்றதும், நாசர் சரத்குமாரை கட்டித்தழுவி, சரத்குமாரின் ஆதரவை கோரினார். இணைந்து பணிபுரிவோம், காழ்ப்புணர்வு இருந்தது. ஆனால் அதனை மறந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார் சரத்குமார்.
21. உப தலைவர்களுக்கான போட்டியில் பாண்டவர் அணியைச் சேர்ந்த கருணாஸ் 1362 வாக்குகளும், பொன்வண்ணன் 1235 வாக்குகளும் பெற்று தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகுமார் (1115), சிம்பு (1107) ஆகியோரை தோற்கடித்தனர்.
22. 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் நந்தா, ரோகிணி, பிரசன்னா உள்ளிட்ட பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேர்கள் வெற்றி பெற்றனர். சரத்குமார் அணியைச் சேர்ந்த ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் என நால்வர் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
23. முன்னணி நிலவரம் வந்து கொண்டிருந்த போது இரு அணியினரும் போட்டிபோட்டு கோஷங்கள் எழுப்பியதால் பதட்டம் நிலவியது. அதனால் போலீஸnர் சின்னதாக தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
24. நடந்து முடிந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி. 1493 வாக்குகள் அவருக்கு கிடைத்தன. குறைவான வாக்குகள் பெற்றவர், உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு. அவருக்கு 1107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், கார்த்தி. அவர் 413 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணனை தோற்கடித்தார். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமாரைவிட 109 வாக்குகளே அதிகம் பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூன்றாவது உறுப்பினர் சிவசாமிக்கு 4 வாக்குகளே கிடைத்தன.
25. வெற்றி பெற்ற பின் பாண்டவர் அணி அனைவருக்கும் நன்றியை தெரிவித்தது. இப்போது பிளாங்கான மனநிலையில் இருக்கிறேன். விரைவில் ஊடகங்களை சந்தித்து விரிவாக பேசுவோம் என்றார் நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர்.