1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
  4. Mysskin-sensor-defensive- Film Festival

மிஷ்கின் சென்சாரை வெளுத்து வாங்கிய தற்காப்பு படவிழாவின் முழுவிவரம்

மிஷ்கின்
சென்னை கமலா திரையரங்கில் தற்காப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மிஷ்கின், சோப்பு இல்லாமலே சென்சாரை ட்ரைக்ளீன் செய்தார்.
 
விழாவில் அவரது பேச்சு மட்டுமில்லை. வாசு, ஜெயம் ரவி ஆகியோர்களின் பேச்சுகளும் சுவாரஸியம். அது பற்றிய ஒரு முழுத்தொகுப்பு.
 
போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான், தற்காப்பு. இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்.
 
விழாவில் மிஷ்கின்  பேசும்போது, “இந்தப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய அடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். 
 
கெட்ட வார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடா செல்லமே -ன்னா திட்ட முடியும்?
 
நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன். ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்கு சுதந்தரம் தேவை. படத் தணிக்கையின்போது சில வார்த்தைகளை நீக்வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை.
 
சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக் கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும்.
 
திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.
 
சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்க முடியாது என்கிறார்கள். என் படத்துக்குக் குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்துவிட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்துதான் படங்கள் வந்துள்ளன. ஆனால் மனிதர்களைவிட பேய்கள் நல்லவை. பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல்.
 
பிசாசைப் பார்த்தால் பயப்படவேண்டாம் என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்துவிட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் இயக்குநர் பாலாவிடம் திட்டுதான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும்போதும் எண்ணியதுபோல செய்ய முடியவில்லை. சுதந்திரம் இல்லாவிட்டால் அது என்ன கலை?
 
நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார். அந்த இடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒரு விஷயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவன செய்ய வேண்டும்.
 
நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன். என் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள்  தயவுசெய்து வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத் துறையைப் பாதுகாக்க வேண்டியது அனைவருடைய கடமை” என்றார். 
 
இயக்குநர் பி.வாசு பேசும் போது, "கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். இன்று எனக்கு பிறந்தநாளும் கூட. என் படக்குழுவினர் தொழில்நுட்பக் குழுவினரை விட்டு விட்டு நான் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான்.
 
இங்கே  என் மகனுக்காக வந்துள்ளேன். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு புகுந்த விடு என்று இரு வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை இன்னொன்று.. 
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

பிள்ளைகளால் வரும் வாழ்க்கை. மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப்பட்டது இப்போது ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.
 
சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்வானாம். அப்பா பாராட்டவில்லையே என்று குறைபடுவானாம்.
 
இந்தப்படம், தற்காப்பு திருப்தியாக வந்து இருக்கிறது. எனக்கு பிடித்தது. இனி சக்திக்கு நல்ல நேரம் வரும். இனி மற்றவர்கள் அவனைப் பாராட்டுவார்கள். நான் என்றும் சொல்வேன், மக்கள் கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அதற்குத்தான் இயக்குநர் தேவை. இப்படம் நல்ல கதையுடன் வந்திருக்கிறது" என்று வாழ்த்தினார்.
 
நடிகர் ஜெயம் ரவி பேசும் போது, "என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி என்பார்.
 
என் படங்களைப் பார்த்து விட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று குறையாகவே சொல்வார். சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம் என்பார். அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா என்பேன். அதற்கு அவர், கெட்டதை எல்லாம் எடுத்து விட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே என்பார். 
 
தற்காப்பு நல்ல தலைப்பு. நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு ,கதை சுமாரா இருந்தால் போதும் என்று நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள்.  அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்கள் நடித்திருக்கிறேன். 
 
சினிமா பொழுது போக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும் சினிமா. 
 
நடிகர் கார்த்தி பேசும்போது, "எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்போது அப்பா சொல்வார் அப்பாவிடமும் குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராத வரைதான் வேலை செய்வோம் என்று.
 
எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும் ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன்.நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ஆனால் முயன்றால் முடியும். எதுவும்10 நாள் வரவில்லை என்றால் முயன்றால் 11ஆவது நாள் வரும். முயற்சியை மட்டும் விடக்கூடாது. உடனே வெற்றிவராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும் இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன்" என்றார்.